பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த செய்தி, அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவலை பூனம் பாண்டேவின் மேலாளர் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடிகை பூனம் பாண்டே “நான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கவில்லை. நான் உயிருடன் தான் இருக்கிறேன்.
துரதிர்ஷ்டவசமாக ஏராளமான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இதனை முற்றிலும் தடுக்க வேண்டிய நோயாகும்.
இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த நோயால் இனி எந்த ஒரு பெண்ணும் உயிரிழக்கக் கூடாது” என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, அந்த பதிவில் தான் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பூனம் பாண்டே உயிரிழந்ததாக நேற்று முழுவதும் செய்தி பரவிய நிலையில் இன்று தான் உயிருடன் இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களிடம் குழப்பத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.