‘என் தொழில் மேல் சத்தியமாக அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை’ – நடிகை தன்யா அறிக்கை..!

0
162

‘Actress Dhanya Balakrishna’: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் CSK – RCB அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது தமிழர்கள் குறித்து நடிகை தன்யா பதிவிட்டு இருந்தார். இந்த பதிவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழர்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டு நடிகை தன்யா பாலகிருஷ்ணா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘நான் செய்யும் தொழில் மேல் சத்தியம், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த, கருத்து நான் கூறியதே இல்லை. 12 வருடங்களுக்கு முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்.

அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை.

இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்கு காரணம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான். அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்றுப்பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல.

நான் என் சினிமா பயணத்தைத் தொடங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே.

அதனால் விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன். என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எந்தவித சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல. இந்த சம்பவம் நடந்ததற்குப்பின் நான் சில தமிழ் திரைப்படங்களும் (ராஜா ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன்.

அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை. சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சர்ச்சையினால் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மனவுளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here