ISPL-T10: இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் – T10 என்பது இந்தியாவில் உள்ள சிறந்த உள்ளூர் கிரிக்கெட் திறமையாளர்களை ஒன்றிணைக்கும் முன்னோடியான டென்னிஸ் கிரிக்கெட் லீக் ஆகும். இது வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த தளத்தை உருவாக்குகிறது.
நகரங்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் எதிர்கால கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் – T10 நடத்தப்படுகிறது. மேலும், ஒரு சிறிய தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் திறமையான வீரர்களை ஒரு பெரிய அரங்கில் கொண்டு வருவதையே இந்த ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பது, நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்து போன்ற தேர்வு செயல்முறையானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது மார்ச் 2 முதல் மார்ச் 9 வரை மும்பையில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, ஸ்ரீநகர் ஆகிய 6 அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் உரிமையாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
அதன்படி, ஹைதராபாத் அணிக்கு ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண், ஸ்ரீநகர் அணிக்கு அக்ஷய் குமார், பெங்களூரு அணிக்கு ஹிர்த்திக் ரோஷன், மும்பை அணிக்கு அமிதாப்பச்சன் ஆகியோர் உரிமையாளராக இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது சென்னை அணிக்கு நடிகர் ‘சூர்யா’ உரிமையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அனைத்து அணிகளின் உரிமையாளர்களால் நாடு முழுவதும் இந்த போட்டிக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை நடிகர் சூர்யா தனது ‘X’ தளத்தில் பதிவு மூலம் வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம் சென்னை! ISPLT 10-ல் எங்கள் சென்னை அணியின் உரிமையாளராக என்னை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும், விளையாட்டுத்திறன், பின்னடைவு மற்றும் கிரிக்கெட்டின் சிறந்து விளங்கும் ஒரு பாரம்பரியத்தை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த லீக் போட்டியின் முதல் சீசன் தயாராகி வரும் நிலையில் ஆர்வமுள்ள வீரர்கள் https://ispl-t10.com/ அதிகராப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, மாநகரத்தில் நடைபெறும் சோதனை போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும், தங்களுடைய ‘கோல்டன் டிக்கெட்’டையும் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்!.. என்ன சொன்னார் தெரியுமா?..