‘Kalaignar 100’: சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட நிலையில், பல முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்கவில்லை. அந்த வகையில் முறையான அழைப்பு விடுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத நடிகர்கள், நடிகைகள் குறித்து காணலாம்..
நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அவர் துபாயில் இருப்பதால் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, நடிகர் விஷாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் விஷால் கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் வெளிநாட்டில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, விஷாலுக்கும் உதயநிதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தான் விஷால் கலந்துகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும், தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களுல் ஒருவரான நடிகர் அஜித் கலந்துகொள்ளவில்லை. பொதுவாக அவர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும், கலந்துகொள்ளமாட்டார். எனவே அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவது சந்தேகம் தான் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஆனால், நடிகர் விஜய் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது. தற்போது அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும், அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
மேலும், நடிகை ராதிகா, “தனது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை” என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், நடிகைகளில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன், ரோஜா உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இந்த நிலையில், பல நடிகைகள் வருகை தரவில்லை. ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நடிகை திரிஷா வரவில்லை. அவர், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்நிகழ்வில் பங்கேற்ற நிலையில் பல முன்னனி நடிகர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘மறைந்தும் பசியை போக்கும் கேப்டன்’..! நினைவிடத்தில் தினமும் மதிய உணவு வழங்க திட்டம்’..!