வெற்றி துரைசாமியின் மறைவுக்கு கமல் இரங்கல்..!

0
138

Vetri Duraisamy: சென்னை முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இயக்குநராக அறிமுகமான படம் ‘என்றாவது ஒரு நாள்’. மேலும், இந்த படம் பல விருதுகளை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றி துரைசாமி, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் விபத்துக்குள்ளான வாகனம் கவிழ்ந்த விபத்தில் அவர் காணாமல் போனார்.

தொடர்ந்து அவரை தேடி வந்த நிலையில் நேற்று (பிப்.12) எட்டாவது நாளாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் கிடந்த வெற்றி துரைசாமியின் சடலம் மீட்கப்பட்டது.

வெற்றி துரைசாமியின் இறப்புக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் தனது ‘X’ தளத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது.

வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம்.

மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன். அவர் விரைவில் இத்துயரிலிருந்து மீள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் உடற்கூராய்வுக்காக சிம்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று (பிப்.13) மாலை சென்னை கொண்டுவரப்படுகிறது.

அதன் பிறகு, வெற்றி துரைசாமியின் உடல் மாலை 5 மணிக்கு சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர், மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here