‘Siren’: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுஜாதா விஜய்குமார் தயாரிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் வரும் 16ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுஜாதா விஜயகுமார் கீர்த்தி சுரேஷ் நடிப்பு குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, “ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், காவல் துறை சைரனுக்கும் உள்ள போராட்டம் தான் படம்.
எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களில் அசத்தும் ஜெயம் ரவி இந்த படத்திலும் அசத்தியுள்ளார். படம் பார்த்தால் உங்களுக்கே புரியும். கீர்த்தி சுரேஷுக்கு நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்காக 5 கிலோ உடல் எடை அதிகரித்து போலீஸாக நடித்துள்ளார்.
சமுத்திரகனி எல்லா பாத்திரங்களிலும் அனைத்து மொழிகளிலும் நடிப்பில் அசத்துகிறார். இந்தப் படத்திலும் நன்றாக நடித்துள்ளார். நடிகர் யோகி பாபு இந்தப் படம் முழுக்க வருகிறார். அவர் நடிப்பைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன்” என்றார்.