‘Mysskin’: தமிழ் முன்னனி நடிகை திரிஷா விவகாரத்திற்கு பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் தங்களது கண்டனங்களை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர், நடிகர் மற்றும் இசையமைப்பாளரான மிஸ்கின், திரிஷா விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.
டபுள் டக்கர் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய மிஸ்கின், “நண்பர்களே ஒரு நடிகையைப் பற்றி அவ்வளவு எளிதாக பேசிவிடாதீர்கள். அவர்களெல்லாம் நல்ல மனிதர்கள். நான் ஒரு இரண்டு முறை தான் திரிஷாவை பார்த்திருக்கிறேன். அவ்வளவு எளிமையான பெண் அவ்வளவு மேன்மையாக பேசுகிறவர்.
நான் ரொம்ப வருத்தப்பட்டேன். எனக்கு தெரியும் பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி தேவைப்படுகிறது, செய்தி போட்டே ஆகவேண்டும். அதற்காக தாயைப்போல் இருக்கும் ஒரு பெண்ணை இப்படி பேசாதீர்கள்.
நம்ம வீட்டுப் பெண்ணை இப்படி பேசுவோமா?.. தயவு செய்து இத பண்ணாதீர்கள் நான் கெஞ்சி கேட்கிறேன். ஒரு நடிகை எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா?.. வாழ்க்கையில் ஒரு உன்னதமான நிலையை அடைய கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. உங்கள் மகள் மாதிரி, உங்கள் தங்கை மாதிரி நினைக்க வேண்டும். உங்களது காதலி மாதிரி கூட நினைக்கலாம் ஆனால் அதில் இரு கண்ணியம் வேண்டும்.
ஒரு பெண்ணை பற்றி தப்பாக பேசவேண்டாம். ஒரு பெண்ணை அழவைக்க கூடாது. இது மாதிரியான செய்தி கிடைத்தால் மிகவும் நாகரிகமாக செய்தியாளர்க எழுதவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.