‘Soodhu Kavvum 3’: விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013ஆம் அண்டு வெளியான திரைப்படம் ‘சூது கவ்வும்’. இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கினார். படத்தில் சஞ்சிதா ஷெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ், அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகத்தை நலன் குமாரசாமி உருவாக்கினார். இந்த படத்திற்கு ‘தர்மம் வெல்லும்’ என பெயரிடப்பட்டிருந்தது.
இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்தார். இதற்கான கதையை சூர்யாவிடம் கூறியிருந்த நிலையில் இது குறித்து சூர்யாவிடம் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாததால் அது கைவிடப்பட்டது.
இதற்கிடையே ‘சூது கவ்வும்’ இரண்டாவது பாகத்தை மிர்ச்சி சிவாவை வைத்து எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கிவிட்டார். இந்த படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், தற்போது ‘சூது கவ்வும்’ மூன்றாம் பாகத்தை நலன் குமாரசாமி இயக்க இருக்கிறார்.
இந்த மூன்றாம் பாகத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறார். சூர்யாவிடம் கூறிய அதே கதை, அதே ‘தர்மம் வெல்லும்’ தலைப்பில் இந்த மூன்றாம் பாகம் உருவாக இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.