‘To Kill A Tiger’: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படும். உலகம் முழுவதும் இருந்து திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் 96ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதில், இந்தியாவில் இருந்து எந்த படைப்புகளும் தேர்வாகவில்லை என்ற தகவல் இந்திய மக்களிடம் வேதனையை ஏற்படுத்தியது. ஆனால் இந்தியாவில் பிறந்த கனடா நாட்டு இயக்குநர் இயக்கிய ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் தேர்வாகியுள்ளது.
இதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமையையும், அதைத்தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக சிறுமியின் தந்தை நடத்திய சட்டப் போராட்டத்தையும் மையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிறந்து, தற்போது கனடா நாட்டில் வாழ்ந்து வரும் நிஷா பஹுஜா என்கிற பெண் தான் இந்த ஆவணப்படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். இந்த படம் பல்வேறு சர்வதேச விழாக்களில் பங்கேற்று மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்கர் விருதுக்கு சிறந்த ஆவணப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ‘டு கில் எ டைகர்’ என்ற படத்தை தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது குறித்த அதிகார்ப்பூர்வமான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.