‘எனக்கும் விஜய்க்கும் போட்டியா?’.. காக்கா கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி

0
91

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.

இந்த நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், தனுஷ், ஏ.ஆர்.ரகுமான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், நெல்சன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, “லால் என்றால் சிவப்பு. சிவப்பு நிறத்துக்கு நிறைய அடையாளங்கள் இருக்கு. அதை கம்யூனிஸ்ட் பயன்படுத்துவாங்க. வன்முறைக்கும் பயன்படுத்துவாங்க.

புரட்சிக்கும் பயன்படுத்துவாங்க. ஐஸ்வர்யா புரட்சிக்காக தேர்ந்தெடுத்துருக்காங்க. இந்த லால் சலாம் கதையை சொல்லும்போதே, இந்த கதைக்கு தேசிய விருது கிடைக்கும் என எனது மகள் கூறினார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சமீபத்தில் நான் கூறிய காக்கா கழுகு கதையை வேறு மாதிரி மாற்றி விட்டனர். எனக்கும், நடிகர் விஜய்க்கும் ஏதோ போட்டி என்பது போல பேசுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. நடிகர் விஜய் என் கண்ணுக்கு முன்பு வளர்ந்த பையன், சின்ன வயதிலிருந்தே அவரை பார்த்திருக்கிறேன்.

ஒரு நாள் ‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பின்போது விஜய்யின் தந்தை என்னிடம் வந்து, “என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. படித்துவிட்டு நடிக்க வரட்டும். நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்” என்றார்.

அப்போது நான் விஜய்யிடம் ‘உங்களால் முடியுமா?’ என்று கேட்டேன், அதற்கு விஜய் என்னால் முடியும் என்றார். அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து உழைப்பால் உயர்ந்துள்ளார். தற்போது நன்றாக நடித்து வருகிறார்.

தற்போது அரசியலுக்கு வரும் முயற்சியில் உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். தற்போது விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலையாக இருக்கிறது.

எனக்கு போட்டி நான் தான் என விஜய்யே கூறினார். அதேபோல, எனது படத்திற்கு நானே போட்டி என கூறியிருக்கிறேன். விஜய்யை போட்டியாக நான் நினைத்தால் அது எனக்கு மரியாதையாக இருக்காது.

அதேபோல என்னை அவர் போட்டியாக நினைத்தால், அது அவருக்கும் மரியாதையாக இருக்காது. எனவே, தயவு செய்து எனது மற்றும் விஜய்யின் ரசிகர்கள் காக்கா, கழுகு கதையை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இது என் அன்பான வேண்டுகோள்” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here