கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘டீப் பேக்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி சிலர் வீடியோவாக வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதற்கு ராஷ்மிகா மந்தனா தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ‘டீப் பேக்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபலங்களின் போலி வீடியோக்களை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரித்தது.
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா முகத்தை பயன்படுத்தி போலி வீடியோ வெளியிட்ட நபரை டெல்லி காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஈமானி நவீன் (24) என்ற நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், இன்ஸ்டாகிராமில் அதிமான பாலோயர்களை பெறுவதற்காக நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோவை வெளியிட்டதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், போலி வீடியோ வெளியிட்ட நபரை கைது செய்த டெல்லி காவல் துறைக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “கைது நடவடிக்கை மேற்கொண்ட டெல்லி காவல் துறைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அன்புடனும், ஆதரவுடனும் அரவணைக்கும் சமூகத்திற்கு உண்மையிலேயே நன்றியுள்ளவளாக உணர்கிறேன்.
பெண்கள் மற்றும் சிறுவர்களே, உங்கள் அனுமதியின்றி உங்கள் படம் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது மார்பிங் செய்யப்பட்டாலோ, அது தவறு! தவறு செய்பவர்கள் மீத் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நினைவூட்டுவதாக இந்த சம்பவம் இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘ராமரை வழிபடுவது நமக்கு கிடைத்த பாக்கியம்’ – கங்கனா ரனாவத்!