Raghava Lawrence: தமிழ் திரைத்துறையின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர், ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.
இதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171ஆவது படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான ஷூட்டிங் வருகிற மார்ச் அல்லது ஏப்ரம் மாதத்தில் தொடங்க இருக்கிறது.
மேலும், இப்படத்தில் ரஜினிகாந்த்திற்கு வில்லனாக நடிகர் லார்ன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, லோகேஷ் கனகராஜ் கதையை இயக்குநர் ரத்னகுமார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜின் ‘G Squad’ நிறுவனம் தயாரிக்கிறது.
முன்னதாக விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க லாரன்ஸிடம் பேசியதாகவும் ஆனால் அவரால் நடிக்க முடியவில்லை என லாரன்ஸே ஒரு மேடையில் கூறியிருப்பார்.
மேலும், லோகேஷ் கனகராஜும் தன்னிடம் ஒரு வித்தியாசமான கதை இருப்பதாகவும் அந்த கதையை தன்னால் இயக்க முடியாது தனது உதவி இயக்குநரை வைத்து அந்த கதையை படமாக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது லோகேஷின் அந்த கதையை ரத்னகுமார் இயக்க, அதில் லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.