தந்தையே பிள்ளையை கொலை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது..! – வைரலாகும் எஸ்.ஏ.சி ஸ்பீச்… லியோ படத்தை தாக்கினாரா?..

0
66

இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‛தேசிங்கு ராஜா’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.

இந்த விழாவில் இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சினிமாவுக்கு வருகின்ற இளைஞர்கள் ஒரு கதையுடன் வாருங்கள். உங்களுக்கென்று ஒரு பொறுப்புணர்ச்சி உள்ளது. ஒரு அப்பாவாக, அண்ணனாக இதனை சொல்லிக்கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறது.

அந்த காலத்தில் பத்து தலையை வெட்டுகிறவர்களை வில்லன் என சொன்னோம். ஆனால் இன்னைக்கு அதே விஷயத்தை ஹீரோவை பண்ண வைக்கிறீர்கள். இது எப்படின்னு எனக்கு புரியவில்லை. இதை எப்படி நாம் சினிமான்னு ஏற்றுக் கொள்கிறோம், கொண்டாடுகிறோம்?

இளைஞர்களுக்கு நீயும் கத்தி எடுத்து பத்து பேரை வெட்டுன்னு சொல்ல வருகிறோமா? ஏனென்றால் இன்றைய இளைஞர்கள் எல்லாம் ஹீரோ என்ன சட்டை போடுகிறார், ஹேர்ஸ்டைல் பண்ணுகிறார் என்பதை பின்பற்றி அப்படியே செய்கிறார்கள்.

தயவுசெய்து உங்கள் காலை தொட்டு கேட்டுக் கொள்கிறேன். நல்ல விஷயங்களை படமாக எடுங்கள். இரண்டரை மணி நேர படத்தில் 3 நிமிடங்கள் நல்ல விஷயங்களை சொல்லுங்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இயக்குநர் எழிலை பொறுத்தவரை நான் அவரிடம் விஜய்யை வைத்து ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் பண்ணுவதற்கு முன் ஒரு கேள்வி கேட்டேன். அதை அவர் தன் படத்தின் மூலம் பதிலாக சொன்னார். அந்த படம் வெள்ளி விழா கொண்டாடியது. அப்ப என்ன விஜய் சூப்பர் ஸ்டாரா? இல்லையே. அந்த கதை அவரை தூக்கி விட்டது.

அந்த படத்துக்குப் பிறகு தான் விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகமானார்கள். நான் உண்மையை ஒப்புக் கொள்வதில் தயங்க மாட்டேன். அந்த படத்தில் யார் நடித்திருந்தாலும் அந்த படம் வெள்ளி விழா கொண்டாடியிருக்கும்.

சமீபத்தில், ஒரு படத்தின் முதல் பாதியை பார்த்தேன். பிறகு படத்தின் இயக்குநரை அழைத்து முதல் பாதி நன்றாக இருப்பதாக கூறினேன். பிறகு இரண்டாம் பாதி சரியில்லை அந்த மதத்தில் அந்த நம்பிக்கையெல்லாம் இல்லை என்றேன். ஒரு தகப்பனே பிள்ளையை பலி கொடுக்க மாட்டார் என சொன்னேன்.

அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த படத்தின் இயக்குநர், உடனடியாக ‛நான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன், பிறகு பேசுகிறேன்’ என கூறிவிட்டு அழைப்பை வைத்துவிட்டார். படம் ரிலீஸ் ஆன பிறகு அனைவரும் இயக்குநர் மீது கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

முன்னதாக அவர்கள் நான் சொல்வதைக் கேட்டு 5 நாட்களுக்கு முன்பே அந்த காட்சிகளை மாற்றியிருக்கலாம். விமர்சனங்களை தாங்கும் தைரியமோ, பக்குவமோ அவர்களுக்கு இல்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here