Selvaraghavan: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ் தற்போது தனது 50ஆவது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சந்திப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி நடிக்கிறார் என்பதால் இந்த படத்திற்கு தனுஷின் சகோதரர் செல்வராகவன் திரைக்கதை எழுத உதவியதாக நெட்டிசன்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது செல்வராகவன் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தனுஷின் 50ஆவது படமான ‘ராயன்’ படத்திற்கு நான் கதை எழுதியதாக தகவல் பரவி வருகிறது.
ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் ‘ராயன்’ படத்தில் நான் எதுவுமே செய்யவில்லை, இது தனுஷின் கனவு கதையாகும். இந்த கதை முழுக்க முழுக்க தனுஷால் உருவாக்கப்பட்டது. நான் இந்த படத்தில் ஒரு நடிகர் மட்டும் தான்” என குறிப்பிட்டுள்ளார்.
செல்வராகவன் நேற்று (மார்ச்.5) தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் அவருக்கு வாழ்த்து கூறும் விதமாக ராயன் படக்குழு செல்வராகவனுக்கு போஸ்டர் ஒன்று வெளியிட்டது.
தொடர்ந்து, பல்வேறு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் செல்வராகவனுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்து கூறிவந்தனர். இந்த நிலையில் தற்போது செல்வராகவன் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது பிறந்தநாளுக்கு உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. எப்போதும் போல நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.