SK: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எனது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது.
அதற்கு, அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கலைத்துறை மற்றும் ஊடகங்களில் இருந்து வாழ்த்திய எனது அன்பான நண்பர்களுக்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் எனது மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பைப் பொழிந்த அனைத்து நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் நன்றி.
‘அமரன்’ டீசர் மூலம் இந்த நாளை மேலும் மறக்க முடியாத நாளாக மாற்றிய எனது தயாரிப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசன் சார், சோனி பிக்சர்ஸ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மகேந்திரன் சார், டிஸ்னி மற்றும் ‘அமரன்’ பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அதே நாளில், எங்கள் ‘சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் உருவான ‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட்டு உலக அரங்கில் பெரும் பாராட்டுகளை பெற்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
எனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய இயக்குநர்
ஏ.ஆர்.முருகதாஸ் சார் மற்றும் ‘SK 23’ பட குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது அன்பான ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவு கடந்த அன்பு தான், என்னை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.