தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்களுக்கான 2024-26ஆம் ஆண்டு தேர்தல் சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. இதில், தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர் என 27 பதவிகள் கொண்ட இந்த சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த போட்டியில் ஆர்.கே.செல்வமணி போட்டியிடப் போவதில்லை என ஏற்கெனவே கூறியிருந்தார். இதனால், செயலாளராக இருந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசு, பொருளாளர் பதவிக்கு இயக்குநர் சரண் ஆகியோர் தாக்கல் செய்தனர். துணைத் தலைவர் பதவிகளுக்கு அரவிந்த் ராஜ், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இணை செயலாளர் பதவிகளுக்கு சுந்தர்சி., எழில், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இவர்களை தவிர மேற்கண்ட பதவிகளுக்கு யாரும் மனு தாக்கல் செய்யாததால் இவர்கள் 8 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் இயக்குநர் பிரிவு செயற்குழு உறுப்பினர்களாக ராஜகுமாரன், ஆர்.மாதேஷ், மனோஜ் குமார், மித்ரன் ஆர்.ஜவஹர், எஸ்.பிரபு, எம்.ராஜ்கபூர், ஆர்.கண்ணன், என்.எஸ்.ரமேஷ் கண்ணா, சி.ரங்கநாதன், சரவணன் சுப்பையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவரும் இன்று (மார்ச்.17) காலை சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.