மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது, படத்தின் கலை இயக்குநர் பிரியன் மாரடைப்பால் உயிரிழந்ததால் சிறிது காலம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன் பிறகு அஜர்பைஜான் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவு மற்றும் சூறாவளி காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போதும், அதே பனிப்பொழிவு நிலவிக் கொண்டிருப்பதால் சென்னையில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். பலமுறை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி படக்குழுவால் திரிஷாவின் கால்ஷீட்டை பயன்படுத்த முடியவில்லை.
நடிகை திரிஷா அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்தில் கமலுடன் நடிக்க இருக்கிறார். மேலும், மலையாளத்தில் ராம், ஐடென்டிட்டி மற்றும் ஹிந்தியில் சல்மான் கானுடன் ஒரு படம் என பல படங்களுக்கு கால்சீட் கொடுத்து விட்டதால் விடாமுயற்சி படத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கிவிட்டு திரிஷாவின் கால்சீட் எப்போது கிடைக்கிறதோ அப்போது அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் மகிழ்திருமேனி கூறியுள்ளார்.