சென்னையின் பிரபலமான இடங்களில் ஒன்று உதயம் தியேட்டர். மக்கள் மனதில் பெரிய அளவு பெயர் பெற்ற இந்த உதயம் தியேட்டர் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த தியேட்டருக்கு ரசிகர்கள் யாரும் வராத காரணத்தால் தியேட்டரை விற்க முன்வந்துள்ளனர்.
மேலும், உதயம் தியேட்டர் இருக்கும் இடத்தில் பலமாடி அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது ‘X’ தளத்தில் கூறியதாவது,
“ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது, இதயம் கிறீச்சிடுகிறது. முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன் ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன.
மாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது என்று மூளை முன்மொழிவதை இதயம் வழிமொழிய மறுக்கிறது இனி அந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விற்றவனின் பரம்பரைக் கவலையோடு என் கார் நகரும்.. நன்றி உதயம்!” என வேதனை தெரிவித்துள்ளார்.