‘Vettaiyan’: இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 170ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக ‘தலைவர் 170’ எனப் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளன்று இப்படத்திற்கு ‘வேட்டையன்’ என டைட்டில் அறிவிக்கப்பட்டது.
இப்படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது.
அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆந்திராவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘வேட்டையன்’ திரைப்படம் கட்டாயம் வருகிற தீபாவளியன்று ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வேட்டையன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது கேமியோவாக ரஜினி நடித்த ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு குறைந்து வரும் நிலையில் வேட்டையன் படம் கட்டாயம் மாபெரும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.