‘VidaaMuyarchi Update’: மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. பின்னர், மீண்டும் படக்குழு சென்னை திரும்பியது.
இந்த நிலையில், வருகிற மார்ச் 15ஆம் தேதி மீண்டும் படக்குழு அஜர்பைஜான் செல்ல இருக்கிறது. இது தான் கடைசி ஷெட்யூல் என கூறப்படுகிறது. சுமார் 30 முதல் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படப்பிடிப்பில் நடிகர் அஜித், திரிஷா மற்றும் அர்ஜூன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேலும் ஒரு அப்டேட்டாக ‘விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ஆகியவை அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.