இயக்குநர் மிகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘தடையற தாக்க’, ‘தடம்’ உள்ளிட்ட பல்வேறு ப்ளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்தவர் மகிழ் திருமேனி. இவரது இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்பபடத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் மெகா ஹிட்டானதைத் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சென்னையிலிருந்து விடாமுயற்சி படக்குழு, அஜர்பைஜானுக்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகிறது. நடிகர் அஜித் சில தினங்களுக்கு முன்னர் அஜர்பைஜானுக்கு சென்றிருக்கிறார். அங்குப் படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் பாணியில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சில நாட்களுக்கு முன்னர் அஜித்தும், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியானது. இதனைக் கண்ட ரசிகர்களுக்கு சஞ்சய் தத்தும் இந்த படத்தில் நடிக்கிறாரோ? என சந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், நடிகை திரிஷா நடிப்பது உறுதியாகி விட்டது. இருந்தபோதிலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
அஜித்துடன் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரிஷா சேர்ந்து நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே கிரீடம், ஜீ, மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் அஜித்துடன் நடித்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகி ரெஜினா கசான்ட்ரா என கூறப்படுகிறது. இவர், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.