Vijay Antony: இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் ‘ரோமியோ’. இந்த திரைப்படத்தில் விஷாலின், மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை விஜய் ஆண்டனி வழங்கும் குட் டெவில் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்தப் படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘ரோமியோ’ படத்தின் செகண்ட் சிங்கிளான ‘வெத்தல’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று ‘ரோமியோ’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் ஆண்டனி, “விநாயக் போன்ற திறமையான இயக்குநரை அறிமுகம் செய்வதில் மிகப்பெரிய மகிழ்ச்சியடைகிறோம்.
படத்தின் கதாநாயகியான மிருணாளினி தன்மையான பொண்ணு. இந்த படத்தை புரோமோட் செய்வதற்காக எங்களை பத்தி கிசுகிசு கிரியேட் பண்ண முடிவுசெய்தோம். ஆனால், எதுவுமே சரிபட்டு வரவில்லை.
நான் முதன் முறையாக ஒரு காதல் படத்தில் நடித்திருக்கிறேன். ஒரு பெண் செய்யும் கொடுமைகளை ஆண் சமூகம் எப்படி பொறுத்துக் கொள்கிறது என்பதை காமெடியாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தோடு நிச்சயம் படத்தைப் பார்க்கலாம்” என்றார்.
அப்போது, செய்தியாளர் ஒருவர் படத்தின் போஸ்டரில் பெண் மது அருந்துவதுபோல காட்சி வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு, பதிலளித்த விஜய் ஆண்டனி, “ஆண் பெண் இருவரும் மது அருந்துவது ஒன்று தான். இருவருக்கும் வேறுபாடு கிடையாது. மது என்பது அந்த காலத்தில் இருந்து இருக்கிறது.
ஜீசஸ் கூட மது அருந்தியிருக்கிறார். அப்போது இதற்கு பெயர் வேறு தற்போது இதற்கு பெயர் வேறு. படத்திற்காக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது அவ்வளவு தான்” என கூறினார் இது சலசலப்பை ஏற்படுத்தியது.