அரசியலில் இறங்கும் விஷால்?.. ‘மக்களுக்காக குரல் கொடுப்பேன்’ – விஷால் அறிக்கை..!

0
73

நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவுள்ளதாக கூறியிருக்கிறார். விஜய்யின் இந்த அரசியல் வருகைக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து கூறி வரவேற்றாலும், சிலர் விஜய்யை விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

கட்சியின் பெயரை மட்டும் அறிவித்ததற்கே ‘தமிழக வெற்றி கழகம்’ தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இவைகளுக்கு எல்லாம் விஜய் எவ்வாறு பதில் அளிக்க இருக்கிறார் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தளபதி விஜய்யை தொடர்ந்து புரட்சி தளபதி விஷாலும் அரசியலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அரசியல் பணிகளில் விஷால் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் விஷால், அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் கட்சி பெயரை அறிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் விஷாலின் கட்சி போட்டியிடப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்கமாட்டேன் என கூறி நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

இந்த நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், ‘இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு’ என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் ‘தேவி அறக்கட்டளை’ மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவர்களை படிக்க உதவி வருகிறோம்.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்கமாட்டேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here