பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு 3 ஆயிரம் பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் அயோத்தியில் ராம்ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 2020 ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அது முதல் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2024 ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமர் கோயில் கட்டுமானத்தின் இறுதி கட்ட பணிகள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்வர். மேலும், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையால் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருமாறு 3 ஆயிரம் பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்ப ராமஜென்ம பூமி அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்திநராகக் கலந்துகொண்டு, சிறப்பு பூஜைகளை மேற்கொள்கிறார். கோயில் திறப்பு விழாவுக்கு, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அமிதாப் பச்சன், ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் ராமர், சீதையாக நடித்த அருண் கோயில், தீபிகா இருவருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது. 50 வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்திநர்களாக பங்கேற்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை அரசு ஒளிபரப்பான தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.