ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; ஆயுதப்படை காவலரிடம் என்.ஐ.ஏ விசாரணை!

0
77

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆயுதப்படை காவலர் ஒருவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி, பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து ஆளுநர் மாளிகையின் முன்பு வீசிவிட்டுச் சென்றார். இதனைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக வினோத்தைக் கைது செய்து, கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத், ஏற்கனவே பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சிறை சென்றது தெரியவந்தது.

மேலும், ஓராண்டாகச் சிறையிலிருந்த அவரை விடுதலை செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காத ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து, அவரை கைது செய்த காவல் துறையினர், அவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ கடந்த நவம்பர் 14ஆம் தேதி கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று பணியிலிருந்த ஆயுதப்படை காவலர் சில்வான் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள என்.ஐ.ஏ திட்டமிட்டது.

அதன்படி, என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சில்வானிடம் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here