கேப்டன் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள்!

0
211

Vijayakanth Passed Away: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறை காரணமாக நேற்று முன்தினம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (டிச.28) காலை 6:10 மணிக்கு அவர் காலமானார். அவரது இறப்புக்கு அரசியல்வாதிகளும், சினிமா துறையினரும் அஞ்சலி செலுத்தி தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த் இறப்பு குறித்து அரசியல் பிரமுகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். தனது சிறப்பான நடிப்பால் கோடான கோடி மக்களின் இதயங்களை வென்றவர்.

பொதுசேவையில் முழுமையாக தன்மை ஈடுபடுத்திக்கொண்ட அரசியல் தலைவர் விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினம். எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் விஜயகாந்த்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எம்.பி.ராகுல்காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சினிமா மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பு மிகப் பெரியது. இதனால் பல லட்சம் மக்கள் மனதில் அவர் நிறைந்திருக்கிறார். அவரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பிற்கினிய நண்பர் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும், பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர்.

நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞரின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.

தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளை கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞரின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து. தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். கலைஞர் உடல்நலன் குன்றியிருந்தபோது நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன்.

கலைஞர் மறைவெய்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.

தமிழுணர்வும், தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்துடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞரின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது.

அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.

கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த்தின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும்.

ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர்.

ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்.

கேப்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்தின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அன்னாரது மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தமிழ்த்திரைத்துறையில் தமது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகனாகத் திகழ்ந்த ஆகச்சிறந்த திரைக்கலைஞர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றிருந்தபோது, அனைவரையும் ஒருங்கிணைக்கும் கனிவுமிக்கப் பெருங்குணத்தாலும், நிர்வாகத் திறமையாலும் கோடிக்கணக்கான ரூபாய் கடனிலிருந்து நடிகர் சங்கத்தை மீட்ட பெருமைக்குரியவர். தம் நண்பர்கள் பலரின் திரைத்திரை வளர்ச்சிக்கு காரணமாகத் திகழ்ந்த பெருந்தகை.

தான் நடிக்கும் படப்பிடிப்பு தளமானாலும், தமது அலுவலகமானாலும் பசியோடு யாரும் இருந்திடக்கூடாது என்று தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி. தமிழ்த்திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் அவர் படைத்த சாதனைகள் காலத்தால் அழியாதவை.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் என்றென்றும் நீங்காது நிலைத்திருக்கும். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் அம்மையார் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அன்புத்தம்பிகள் விசய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், வைகோ, ப.சிதம்பரம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: RIP Vijayakanth: மக்கள் மனதில் வாழும் ‘கேப்டன் விஜயகாந்த்’!. மனிதம் பேசிய மகத்தான தலைவன்’!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here