சென்னையில் காய்கறிகள் விலை உயர்வு.. பொதுமக்கள் அவதி..

0
90

சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்குக் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.

மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்த சென்னை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இருந்தபோதிலும், உணவு, பால் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

முறையான மின்சார வசதி இல்லாத நிலையில் மாநகராட்சி மேயர் பிரியா வீட்டிற்குச் சென்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து, பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. புயல் காரணமாகக் காய்கறி வரத்து குறைந்திருப்பதால் காய்கறிகளின் விலை அதிகரித்திருப்பதாக காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர்.

அதன்படி, சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் தரத்தின் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், இரண்டாம் தரத்தின் விலை 90 ரூபாய்க்கும், மூன்றாம் தரத்தின் விலை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், பெரிய வெங்காயம் கிலோ 50 ரூபாயைக் கடந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காயத்தின் முதல் ரகத்தின் விலை 58 ரூபாய்க்கும், இரண்டாம் தரத்தின் விலை 54 ரூபாய்க்கும், மூன்றாம் தரத்தின் விலை 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரு தக்காளி 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உருளை ஒரு கிலோ விலை தரத்தின் அடிப்படையில் 18 ரூபாய், 20 ரூபாய், 32 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

ஊட்டி கேரட் 25 முதல் 35 ரூபாய் வரைக்கும், பெங்களூரு காரட் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஊட்டி பீட்ரூட் 40 முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பீன்ஸ் 50 முதல் 45 ரூபாய் வரைக்கு, சௌசௌக்காய் 15 முதல் 10 ரூபாய் வரைக்கும், முள்ளங்கி 40 முதல் 30 ரூபாய்க்கு எனத் தரத்தின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெண்டைக்காய் 55 ரூபாய்க்கும், முட்டை கோஸ் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவின்றி தவித்து வரும் நிலையில் தற்போது இந்த காய்கறிகளின் விலை ஏற்றம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, புயலால் பாதிப்படைந்த பகுதிகளைச் சீர்செய்து இயல்பு நிலைக்குத் திரும்ப அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here