நிரம்பி வரும் அணைகள்.. ‘உபரிநீரை வெளியேற்றச் சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள வேண்டும்’ – முதலமைச்சர் ஸ்டாலின் ஆனை!

0
179

CM Stalin: தென்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “கடந்த மார்ச் 2008ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்தபடி, தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கனஅடி வெள்ளநீரில், கன்னடியன் அணைக்கட்டில் இருந்து 2765 மில்லியன் கன அடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தை நான்கு நிலைகளாக செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு, அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 21.02.2009 அன்று இத்திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தற்போது, முதல் மூன்று நிலைகளுக்கான பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு நான்காவது நிலைப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் 67.1 கி.மீ நீளத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கி.மீ நீளத்திற்கும், ஆக மொத்தம் 75.2 கி.மீட்டர் நீளத்திற்கு வெள்ளநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் (56933 ஏக்கர்) பாசன உறுதி பெறும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் பயன்பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்களும்
பயன்பெறும்.

தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இத்திட்டத்தில் உபரிநீரை கொண்டு செல்வது குறித்து, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களிடமும் நீர்வளத்துறை அலுவலர்களுடனும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்தாலோசித்தார்கள்.

இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்ட மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டார்கள். இவ்வாறு உபரிநீர் திறக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு செயல்பாட்டுக்கு இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால், வேளாண் பெருமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here