‘மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை’ – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

0
115

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிடத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் ரொக்கமாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500-ல் இருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500 ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். மழையினால் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410-ல் இருந்து, ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக 30 ஆயிரம் ரூபாயிலிருந்து, 37ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக 3ஆயிரம் ரூபாய் என்றிருந்ததை. 4ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

முழுமையாகச் சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.32,௦௦௦-ல் இருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாகச் சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும்.

அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துச் செய்யும் என உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here