முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம்.ராஜேந்திரன் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவி இரங்கல்!

0
99

M. M. Rajendran: ஒடிசா மாநில முன்னாள் ஆளுநரும் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன்(88) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

எம்.எம்.ராஜேந்திரன் 1935ஆம் ஆண்டு பிறந்தார், கல்லூரி படிப்பைச் சென்னையில் முடித்தார். 1957ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகி உதவி ஆட்சியர், துணை ஆட்சியர்போன்ற பொறுப்புகளில் வகித்து வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரானார்.

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலிலிருந்தபோது தலைமைச் செயலாளரான ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 1989ஆம் ஆண்டில் முதலமைச்சராகக் கருணாநிதி வந்த பிறகும் அதே பதவியில் அவர் தொடர்ந்து பணியாற்றினார்.

இந்நிலையில், முன்னாள் ஆளுநரும், தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரனின் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எம்.எம்.ராஜேந்திரனின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரனின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. திறமையான நிர்வாகி மற்றும் எழுத்தாளரான அவர் தனது மகத்தான பொதுச் சேவைக்காக நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “எம்.எம்.ராஜேந்திரன் மறைவெய்தினார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன். 1957பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது தனுஷ்கோடி இயற்கைச் சீற்றத்தைத் திறமையாகக் கையாண்டார்.

அந்த அனுபவத்தைக் கொண்டு 1999-ல் ஒடிசா மாநில ஆளுநராக இருந்தபோது புயலைத் திறம்பட எதிர்கொள்வதில் முக்கிய பங்காற்றினார். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலிலிருந்தபோது தலைமைச் செயலாளரான ராஜேந்திரன், 1989ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சரான பின்னும் அப்பதவியில் நீடித்தார்.

அரசு நிர்வாகத்திலும், அரசியலமைப்புப் பதவிகளிலும் சிறப்பாகவும் நிர்வாகத் திறனோடும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டவர். அவரை இழந்து தவிக்கும் அவரது துணைவியாருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here