RIP Vijayakanth: மக்கள் மனதில் வாழும் ‘கேப்டன் விஜயகாந்த்’!. மனிதம் பேசிய மகத்தான தலைவன்’!..

0
190

Vijayakanth: தமிழ்நாட்டில் ‘கேப்டன்’ என செல்லமாக அழைக்கப்படுபவர் விஜயகாந்த். திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமான இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1952ஆம் ஆண்டு பிறந்த விஜயராஜ், தீவிர எம்ஜிஆர் ரசிகராவார். சினிமாவின் மீது அவருக்கு ஏற்பட்ட காதல் காரணமாக அவர் சென்னைக்கு வந்தார்.

சென்னை தியாகராய நகரில் தங்கி அவர் படவாய்ப்புகளைத் தேடி அலைந்தார். நிறைய இடங்களில் அவர் அத்தனை அவமானங்கள் பெற்றிருக்கிறார். நிறைய இடங்களில் அவர் நிராகரிக்கப்பட்டார். இவை அனைத்தையும் தாண்டி ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் விஜயராஜ் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

தொடக்க காலத்தில் அவர் நடித்த படங்கள் சரிவர ஓடவில்லை. அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது ‘தூரத்து இடி முழக்கம்’. அதன் பிறகு தான் விஜயராஜ் என்ற தனது பெயரை ‘விஜயகாந்த்’ என மாற்றிக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடிப்பில் வெளியான படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்தது. இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த படங்களில் சமூக சீர்த்திருத்தங்களைப் பேசத் தொடங்கினார்.

படத்திம் மட்டும் அல்ல நிஜத்திலும் அவர் மக்களின் உரிமைக்காக பேசுபவர். அப்போது தான் ஒரு நாள் படப்பிடிப்பின்போது அங்கிருந்த பணியாளர்களுக்கு ஒருவிதமான உணவுகளும், படத்தின் நாயகர்களுக்கு ஒரு விதமான உணவுகளும் பரிமாறியதைக் கண்டுள்ளார்.

அப்போது, அவர் கதாநாயர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ, அதையே தான் படத்தில் பணியாற்றும் கடைக்கோடி ஊழியர்களும் சாப்பிட வேண்டும் என கூறி அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டது. இந்த முறையை கொண்டுவந்தவர் விஜயகாந்த் தான்.

மேலும், பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று நேரமும் உணவு வழங்கவேண்டும் எனவும் அதில் ஒரு நேரம் அசைவ உணவு வழங்க வேண்டும் எனவும் விஜயகாந்த் உத்தரவிட்டார். அதன் பேரில் தான் தற்போது வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தனது அலுவலகத்திற்கு யார் எப்போது வந்தாலும் அவர்களுக்கு உணவு வழங்கப்படும் என கூறினார். கூறியது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்துக் காண்பித்தார். தொடர்ந்து தற்போது வரை யாராக இருந்தாலும், கேப்டன் அலுவகத்திற்குச் சென்று சாப்பிட்டு வரலாம். சினிமா துறையில் உணவு சார்ந்த புரட்சியை ஏற்படுத்தியது விஜயகாந்த் தான்.

இதனால் தான் விஜயகாந்த்தை ‘புரட்சிக் கலைஞர்’ என விஜயகாந்த் அன்போடு அழைக்கப்பட்டார். நடிகர்கள் என்றால் படத்தில் மட்டும் நடிப்பவர்களாக இருக்கக் கூடாது ஏழை எளிய மக்களுக்கு உதவவேண்டும் என அனைவருக்கும் அறிவுரை வழங்கினார். விஜயகாந்த் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வந்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னனி கதாநாயகனாக வலம் வந்தார். மேலும், சினிமாவில் எண்டிரியான முதல் 10 ஆண்டுகளில் மட்டும் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களை நடித்து உலக சாதனை படைத்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான்.

தனக்கு வாழ்க்கை கொடுத்த தமிழ் சினிமாவைத் தவிற வேறு எந்த மொழிகளிலும் தான் நடிக்க மாட்டேன் என கூறியவர் விஜயகாந்த். இவர் நேரடி தெலுங்கு திரைப்படங்களில் நடித்திராத போதும், இவரது பல படங்கள் மொழிமாற்றம் செய்து வெளியாகி வெற்றிபெற்றுள்ளது.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகராக உள்ள நடிகர் தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் விஜயகாந்த்துக்கு அளப்பெரிய பங்குண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. விஜய்யின் திரைப்பயணத்தை தொடங்கி வைத்தவரே விஜயகாந்த் தான்.

இதனால் தான், நட்பு, மரியாதை, நன்றி ஆகியவற்றின் மொத்த உருவம்தான் விஜயகாந்த் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. அடிக்கடி கூறுவார். தனது படங்களில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்திய ஒரே நடிகர் விஜயகாந்த் தான். பேரிடர் காலங்களில் பெரிய அளவில் நிவாரண நிதிகொடுத்து உதவியவர் விஜயகாந்த்.

கார்கில் நிவாரண நிதிக்கு 5லடசம் ரூபாய் வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் ‘லிட்டில் ப்ளவர்’ பள்ளிக்கு 25ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி வருகிறார். பள்ளி, கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை எளிய மாணவர்களை கட்டணம் இன்றி தனது கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறார். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாள் தினத்தன்று ஏழைகளுக்கு தையல் இயந்திரம், மூன்று சக்கர வண்டி, இஸ்திரிப்பெட்டி போன்றவைகளை வழங்கி வருகிறார்.

சிறந்த நிர்வாகத்தன்மை கொண்டவர் விஜயகாந்த், 1999ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று சங்கத்தின் கடனை அடைத்தார். தமிழ்நாட்டு அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஜாம்பவான்கள் இருந்தபோதே, துணிச்சலாக அரசியலில் களமிறங்கி இருபெரும் கட்சிகளையும் ஆட்டம் காணவைத்தார் விஜயகாந்த்.

எம்ஜிஆரின் மனைவியும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரன், தேர்தல் பிரச்சாராங்களில் எம்ஜிஆர் பயன்படுத்திவந்த வாகனத்தை விஜயகாந்திற்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2005ஆம் ஆண்டு தேமுதிக எனும் கட்சியை தொடங்கி, 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு 8 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சித்தலைவராக உருவாகினார்.

அடுத்தடுத்த காலக்கட்டத்தில் தேமுதிக பல வீழ்ச்சிகளை, சூழ்ச்சிகளைச் சந்திக்க நேர்ந்தது. இருந்தபோதிலும், விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதருக்காக இன்றளவும் தேமுதிகவுக்கு பலர் ஆதரவாக நின்றனர் தற்போது நின்றுகொண்டிருக்கின்றனர் அவரது தொண்டர்கள்.

சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியதாகும். விஜயராஜ் என்ற தனது பெயரை தமிழ் சினிமாவுக்காக விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இவரை புரட்சிக் கலைஞர், கேப்டன், தர்மதுரை, கருப்பு எம்ஜிஆர், கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் தனது 71 வயதில் நம்மிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று (டிச.28) விஜயகாந்த் காலமானார்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கு இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, விஜயகாந்த்தை காண ஏராளமான தொண்டர்கள் குவித்து வரும் நிலையில், அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here