பில்கிஸ் பானு வழக்கு: ‘நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது’ – முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்!

0
102

Bilkis Bano case: குஜராத்தில் 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் செய்யப்பட்டார். மேலும், அவரது குழந்தை உள்பட குடும்பத்தினர் 7 பேரை அந்த கும்பல் படுகொலை செய்தது.

நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த 2008ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த அவர்கள், 2022 ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு நீண்ட நாள்களாக நடந்த நிலையில் நேற்று இந்த வழக்கிற்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதன்படி, பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது.

இந்த முடிவை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், 11 பேர் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘X’ தளபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை – நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.

“நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.

நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here