சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் அந்தப் பகுதியில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் கடந்த ஆண்டு குடியரசு தினவிழா, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது.
அதன்படி இந்த ஆண்டும் உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில்ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அவருடன் முதலமைச்சர் ஸ்டாலின் இருந்தார். அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. தொடர்ந்து ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் தேசியக்கொடிக்கு மரியாதை செய்தனர்.
அதன்பின்னர் அணிவகுப்பு மேடைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். பின்னர், பதக்கம் பெற்றோர் குழுவாக முதல்-அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விழாவையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.