சென்னை: வடகிழக்குப் பருவமழை மிக தீவிரம் அடைந்திருப்பதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தென்மாவட்டங்களின் சில பகுதிகளில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கடலோ மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மாலை வரை மிக கனமழை பெய்யும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதால் நிர்வாக ரீதியாக இரண்டு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளையும், நாளை மறுதினமும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களின் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.