Captain Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடம் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்துச் சென்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (டிச.28) அவர் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.
கேப்டன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்துவற்காக பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் தேமுதிக அலுவலகம் சென்றனர். கட்டுக்கடங்காத கூட்டம் வரத்தொடங்கியதால் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஆனால், அங்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு லட்சக் கணக்கான மக்கள் தீவுத்திடலை நோக்கி கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் படையெடுக்கத் தொடங்கினர்.
காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மதியம் ஒரு மணிக்கு பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலமாக கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் தீவுத்திடலில் இருந்து அலங்காரம் செய்யப்பட்ட இறுதி ஊர்வல வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டது.
அந்த வாகனத்தின் இருபுறமும், சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நின்று கேப்டன்.. கேப்டன்.. என கதறியவாறு வாகனத்தின் பின்னாடியே ஓடிச் சென்றனர். சுமார் 30 மணி நேரமாக பொதுமக்கள் விஜயகாந்த்தின் நல்லடக்கத்திற்காக காத்திருந்தனர்.
மேலும், தேமுதிக அலுவலகத்தில் நடந்த இறுதிச் சடங்கில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால் பொதுமக்களுக்காக இறுதிச் சடங்கு நடைபெறுவதை எல்இடி திரையின் மூலம் காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
கேப்டன் உடல் 50 கிலோ சந்தன கட்டைகளால் உருவாக்கப்பட்ட சந்தன பேழையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஒரு சுற்றுக்கு 24 குண்டுகள் என மூன்று சுற்றுகளாக வானத்தை நோக்கி 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: RIP Vijayakanth: மக்கள் மனதில் வாழும் ‘கேப்டன் விஜயகாந்த்’!. மனிதம் பேசிய மகத்தான தலைவன்’!..