Vijayakanth Passed Away: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (டிச.28) காலை 6:10 மணிக்கு அவர் காலமானார். அவரது இறப்புக்கு அரசியல்வாதிகளும், திரைத்துறை துறையினரும் அஞ்சலி செலுத்தி தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் யோகி பாபு தனது இரங்கல் காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், “கேப்டன் விஜயகாந்த் சார் இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இருந்தபோதிலும், அவர் செய்த தானம், தர்மம், புண்ணியம் இவை அனைத்தும் இந்த பூமியில் நிலைத்துத் தான் இருக்கும்.
ஏனென்றால் அவர் நல்ல உல்லம் கொண்டவர், நிறையப் பேருக்கு நல்லது செய்திருக்கிறார். கொரோனா கால கட்டத்தில் விஜயகாந்த்தைச் சந்திக்க வேண்டும் எனக் கேட்டேன், உடனே சந்திக்கலாம் எனக் கூறினார். சுமார் 2, 3 மணி நேரங்கள் அவருடன் அமர்ந்து பேசினேன்.
நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார், சிறியவர்கள் பெரியவர்கள் என பாராமல் அனைவரையும் மதிக்கக்கூடியவர். இந்த நிலையில், என்னால் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. நான் வெளியூரில் படப்பிடிப்பில் இருப்பதால் அங்கு வரமுடியவில்லை.
கேப்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என வீடியோ மூலம் யோகி பாபு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: ‘எப்போதும் மக்கள் பற்றிய சிந்தனை உடையவர் விஜயகாந்த்’ – நடிகர் நாசர் இரங்கல்!