உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் அயோத்தியில் ராம்ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 2020 ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அது முதல் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2024 ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ராமர் கோயில் கட்டுமானத்தின் இறுதி கட்ட பணிகள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்வர்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 500 பக்தர்கள் இணைந்து, அயோத்தி ராமர் கோயிலுக்கு 2ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட கோயில் மணியை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
ஒரே வார்ப்பில் செய்யப்பட்டுள்ள இந்த மணியின் ஓசை சுமார் 10 கி.மீ., வரை கேட்கக்கூடியது எனறக் கூறப்படுகிறது. இதோடு சேர்த்து தலா 51 கிலோ எடை கொண்ட 7 மணிகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த மணிகளை அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் பெற்றுக்கொண்டார்.