Dayanidhi Maran Issue: தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்தி பேசும் வடமாநிலத்தவர் குறித்து தயாநிதி பேசிய பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசிய வீடியோ இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாநிதி மாறன், “ஆங்கிலம் தெரிந்த காரணத்தால் தான் நமது இளைஞர்கள் படித்துவிட்டு ஐடி நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள். இந்தி இந்தி என்கிறார்களே அவர்கள் நிலையை பாருங்கள்.
இன்று கட்டடம் கட்டுபவர்கள் எல்லாம் யார்? உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தி மட்டும் படிப்பவர்கள் தான் இப்போது தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக் கொண்டு, வீடு கட்டி தருகிறார்கள். சாலையை சுத்தம் செய்கிறார்கள், கழிவறை கழுவுகிறார்கள். இதுதான் இந்தி படித்தவர்களின் நிலை” என்றார்.
தயாநிதி மாறனின் இந்த பேச்சு குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “கருணாநிதியின் கட்சி திமுக. திமுக என்பது சமூக நிதியில் நம்பிக்கை உள்ள கட்சி. அக்கட்சியின் தலைவர் யாராவது உத்தரப் பிரதேச, பீகார் மக்களைப் பற்றி ஏதாவது பேசியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது.
நாங்கள் அதை ஏற்க முடியாது. பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மக்கள் கழிவறைகளை சுத்தம் செய்ய வருவதாக அவர் கூறுவது கண்டனத்திற்குரியது. இது ஒரே நாடு. மற்ற மாநில மக்கள்களையும் மதிக்கிறோம். இதுபோன்ற கருத்துகளை கூறக்கூடாது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கும் மக்கள் மரியாதை அளிக்க வேண்டும்” என்றார்.
மேலும் இது குறித்து பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை பொறுப்பாளர் அமித் மாளவியா தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்திரப் பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து ஹிந்தி பேசுபவர்கள் தமிழ்நாட்டிற்கு சென்று கழிவறைகளை சுத்தம் செய்கின்றனர் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்; இது கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் உதயநிதி, “கொசுக்கள், டெங்கு, காய்ச்சல் ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது. சனாதனத்தை நாம் எதிர்ப்பதற்கு பதிலாக அதை ஒழிக்க வேண்டும்” என்ற பேச்சு தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தயாநிதி மாறனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமராக நினைத்துக் கொண்டு பேசுகிறார்’ – திருமாவளவன் விமர்சனம்..!