கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும். இனிமேல் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு செல்லலாம் என சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்து அரசுப் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடைகளை அணிந்து வர கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாள ஆடை அணியக் கூடாது என அரசு உத்தரவிட்டது செல்லும் என்று அதிரடி தீர்ப்பை வழங்கியது.
இதனை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த 5 பேர் அடங்கிய நீதிபதி அமர்வில், 3 நீதிபதிகள் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை இறுதி செய்தனர். மேலும் 2 நீதிபதிகள் மாணவிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினர்.
இதனால் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை உறுதி செய்யப்பட்டது. இதனால் தற்போது வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர தடை உள்ளது. இந்த நிலையில் நேற்று மைசூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற மலர்கண்காட்சியை கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அவர், “கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் ஹிஜாப் அணிய தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது மத அடையாள ஆடைகளை கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவிகள் அணியக்கூடாது என்று சட்டம் கொண்டுவரப்பட்டது.
உச்ச நீதிமன்றம் வரை மாணவிகள் சென்றும் அவர்களுக்கு ஆதரவான பதில் கிடைக்கவில்லை. என்ன உடை அணிய வேண்டும் என்பதும், என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதும் தனிமனித உரிமை. அதற்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது. ஆடை அணிவதன் அடிப்படையில் மக்களை வேறுபடுத்தி பிரித்துப் பார்க்க கூடாது. அந்த வேலையை பாஜக செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் அவ்வாறு செய்யாது.
எனவே ஹிஜாப் தடையை காங்கிரஸ் அரசு வாபஸ் பெறுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும். இனிமேல் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு செல்லலாம். தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து கொள்வதும், உணவுகளை உண்பதும் அவரவர் தனிப்பட்ட விஷயம். இதில் நான் இடையூறு செய்ய மாட்டேன்” என்றார்.