திடீரென நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள்.. உறுப்பினர்கள் அச்சம்..! யார் அந்த ஆசாமிகள்?

0
231

புதிய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் இன்று (டிச.13) நடைபெற்று வரும் நிலையில், மக்களவையை பாஜகவைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் வழிநடத்திக்கொண்டு இருந்தார். அப்போது, திடீரென பார்வையாளர் அரங்கிலிருந்து மக்களவைக்குள் அத்துமீறிக் குதித்த 2 பேர், அங்கிருந்த மேஜைகளில் ஏறி ஓடினர்.

தொடர்ந்து, அவர்கள் தங்களது காலணிக்குள் மறைத்து வைத்திருந்த மஞ்சள் வண்ண புகையை வெளிப்படுத்தும் உலோக பொருளை வெடிக்கச் செய்தனர். இதனால், மக்களவையில் புகை எழும்பியது. மேலும், சர்வாதிகாரம் கூடாது என்றும் முழக்கங்களை எழுப்பிக்கொண்டே ஓடினர்.

இதனைக் கண்ட நாடாளுமன்ற உறுப்பினர், செய்வதறியாமல் திகைத்துப்போய் இருந்தனர். தொடர்ந்து, அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். பிறகு இருவரையும் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அவர்களுடன் வந்திருந்த நீலம், அன்மோல் ஷிண்டே என இரண்டு பெண்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வண்ணப் புகையை உமிழும் பொருளுடன் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களையும் காவல் துறையினர் இழுத்துச் சென்று கைது செய்தனர். இந்த பரபரப்பான நேரத்தில் அவையில் பிரதமர், உள் துறை அமைச்சர் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவைக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நாளில், மக்களவைக்கு நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அது வெறும் புகை மட்டுமே எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலைப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர். நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த நபர்களில் ஒருவரிடம் இருந்த நுழைவுக்கான அனுமதிச் சீட்டில் சாகர் சர்மா என அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவருக்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்.

பிரதாப் சிம்ஹா பெயரில் அந்த அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இதில், மற்றொரு நபர் கர்நாடகாவின் மைசூரு நகரைச் சேர்ந்த டி. மனோரஞ்சன் எனத் தெரியவந்துள்ளது. அவர் ஒரு பொறியாளர் என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தைப் போல் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் இதே நாளில் நுழைந்த 5 பயங்கரவாதிகள், பணியிலிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். நாடாளுமன்றத்தில் உள்ளே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில் நடந்த தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக அங்குச் சென்ற பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளைத் தாக்கினர். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த சண்டையில் 5 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒன்பது பணியாளர்கள் உயிரிழந்தனர். இந்த கோரச் சம்பவத்திற்குப் பிறகு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பார்வையாளர்கள் பலகட்ட கெடுபிடிகள், சோதனைகளுக்குப் பிறகே நாடாளுமன்றம் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

நாடாளுமன்றத்திற்குள் நுழைய 4 கட்ட பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படும். இருந்தபோதிலும் இன்று இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், இன்று நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here