உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் அயோத்தியில் ராம்ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 2020 ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அது முதல் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2024 ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ராமர் கோயில் கட்டுமானத்தின் இறுதி கட்ட பணிகள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்வர். மேலும், வெவ்வேறு பாரம்பரியங்களைச் சேர்ந்த 13 அகாராக்களின் 150 துறவிகள் மற்றும் சாமியார்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதேபோல, 2ஆயிரத்து 200 விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு இருக்கிறது. காசி விஸ்வநாத், வைஷ்ணவதேவி போன்ற பெரிய கோயில்களின் தலைவர்கள், மதம் மற்றும் அரசியலமைப்பு மையங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
புத்த மத தலைவர் தலாய் லாமா, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், நடிகை மாதுரி தீட்சித், திரை இயக்குநர் மதுர் பண்டார்கர், முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, இஸ்ரோ இயக்குநர் நிலேஷ் தேசாய் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த ஆண்டில் முதன்முறையாக, கடந்த செவ்வாய்க்கிழமை அயோத்திக்கு சென்றார். அயோத்தி நகரானது, மிக தூய்மையான மற்றும் அழகான நகராக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதேபோன்று, சாலைகளில் தூசு இருக்கக் கூடாது என்றும் கழிவறைகள் தினமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார். நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து முழு அளவில் ஆய்வு செய்த அவர், புனிதர்கள் மற்றும் சாமியார்களின் நலன்களை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் கூபெர் திலா பகுதிக்குச் சென்று ஜடாயுவுக்கு அஞ்சலி செலுத்தினார். குறிப்பிட்ட காலத்திற்குள் அதிக தரத்துடன் பணிகளை முடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிச் சென்றார்.