உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு வரும் 22ஆம் தேதி கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக படகு சவாரி வழங்கப்படும் என படகோட்டும் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து ‘மா கங்கா நிஷாத் ராஜ் சேவா’ அறக்கட்டளையின் செயலாளர் சாம்பு சாஹ்னி கூறுகையில், “இங்குள்ள நிஷாத சமுதாயத்தைச் சேர்ந்த படகோட்டும் தொழிலாளர்களான எங்களுக்கு கடவுள் ராமருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ராமர், லட்சுமணர் மற்றும் சீதை ஆகியோர் நதியை கடந்து காட்டிற்கு செல்ல நிஷாத மன்னரான குகன் உதவி செய்துள்ளார். அந்த பாரம்பரியத்தையொட்டி, ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, 22ஆம் தேதி பனாரசில் உள்ள கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்களுக்கு இலவச படகு சவாரி வழங்கப்படும்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது, ராஜ்காட்டில் இருந்து நிஷாத்ராஜ் காட் வரை ‘ஷோபா யாத்திரை’ (ஊர்வலம்) நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.