ராமர் கோவில் கருவறைக்குள் சென்ற குரங்கு.. பதறிப்போன பாதுகாப்பு வீரர்கள்.. என்ன நடந்தது?

0
143

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி குழந்தை ராமரின் 51 அங்குல சிலையின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி கோவிலை திறந்து வைத்தார்.

இந்த விழாவிற்கு நாட்டின் முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அதன்படி விழாவில் முக்கிய நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.

அன்றைய தினம் பொதுமக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்காத நிலையில் நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமர் தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் இன்றும் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை குரங்கு ஒன்று திடீரென ராமர் கோவிலின் கருவறைக்குள் தெற்கு வாசல் வழியே நுழைந்துள்ளது.

பின்னர் ராமர் சிலையை நோக்கி அந்த குரங்கு சென்றது. அப்போது கோவிலில் இருந்த பாதுகாப்பு வீரர்கள், உடனடியாக குரங்கை நோக்கி ஓடினர். இந்த சம்பவம் பக்தர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா தனது ‘x’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று மாலை 5.50 மணியளவில் தெற்கு வாசல் வழியே கோவில் கருவறைக்குள் நுழைந்த குரங்கு ஒன்று, உற்சவர் சிலையருகே சென்றது.

விரைவாக செயல்பட்ட அந்த குரங்கை கண்டதும் கோவிலின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலர்கள் பதறி போனார்கள்.

அது உற்சவர் சிலையை தரையில் தூக்கி வீசிவிட கூடும் என பயந்து விட்டனர். போலீசார் அந்த குரங்கை நோக்கி ஓடியதும், அந்த குரங்கு அமைதியாக வடக்கு வாசலை நோக்கி ஓடியது.

ஆனால், அதன் கதவு மூடப்பட்டு இருந்தது. இதனால், கிழக்கு நோக்கி திரும்பி திரண்டிருந்த கூட்டத்தினரை கடந்து சென்றது. எவருக்கும் எந்தவித தீங்கும் செய்யாமல் கிழக்கு வாசல் வழியே வெளியேறியது.

குழந்தை ராமரை பார்ப்பதற்காக அனுமன்ஜியே நேரில் வந்தது போன்று தங்களுக்கு தோன்றியது என அதன்பின்னர் பாதுகாப்பு வீரர்கள் கூறினார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here