‘ரூ.4000 கோடி என்னாச்சு?.. உண்மையிலே மக்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறதா?’ – நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி..!

0
168

டெல்லி: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (டிச.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் பேசியதாவது, “ தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே கொடுக்க வேண்டிய நிதியை முன்கூட்டியே கொடுத்துள்ளோம், சுமார் ரூ.900 கோடி மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 12 ஆம் தேதியே அறிவித்தது.

தொடர்ச்சியாக வானிலை மையம் மழை எச்சரிக்கை கொடுத்து வந்த நிலையில், எச்சரிக்கை கொடுக்கவில்லை எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்களைச் சென்று பார்க்காமல் முதலமைச்சர் ஸ்டாலின், INDIA கூட்டணி கூட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து டெல்லிக்குச் சென்றார்.

அவரது கூட்டங்கள் எல்லாம் முடிந்த பின்பு, போகிற போக்கில் பிரதமரைச் சந்திக்கலாம் எனச் சந்தித்துவிட்டுச் சென்றார். ஆனால், இரவானாலும் பரவாயில்லை ஒரு மாநிலத்தில் முதல்வர் நம்மைப் பார்க்க வேண்டும் என்று கேட்கிறார் என்பதற்காக அவரை பார்த்துப் பேசியவர் பிரதமர் மோடி. மாநிலத்தில் பேரிடர் நடைபெறும்போது, கூட்டணிக் கட்சிகளே கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு அங்கே போய் மக்களோடு முதல்வர் நின்றிருக்க வேண்டும். நின்றாரா?”.

அன்புமணி ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுச் சரியானது இல்லை. சென்னையில் இருக்கும் வானிலை மையம் மிகவும் துல்லியமாக்கக் கணிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தமிழ்நாடு அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய பேரிடர் மீட்பு படைகள் செல்வதற்கு முன் அங்குத் தமிழ்நாடு அரசு தரப்பில் யார் இருந்தார்கள்?

ரூ.4000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், எவ்வளவு மழை வந்தாலும் சென்னைக்குப் பாதிப்பு இருக்காது என அமைச்சர் ஒருவர் கூறிய நிலையில், மிக்ஜாம் புயல் வந்த பிறகு ரூ. 4000 கோடியில் 42 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அப்போது அந்த பணம் எங்கே போனது?

காப்பீட்டு நிறுவனங்களை 19ஆம் தேதியே தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு வெள்ளத்தின் பின் என்ன பாடம் கற்றுக்கொள்ளப்பட்டது? தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு பேரிடர்களைச் சந்தித்துள்ளது. இந்த பேரிடர்கள் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

இதனால், தமிழ்நாட்டிற்குக் கொடுக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்தப்படவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரும் ரூ.6 ஆயிரம் நிவாரணத்தை ஏன் ரொக்கமாகக் கொடுக்கின்றீர்கள்? வங்கிக் கணக்கில் செலுத்தலாமே? அரசு பணம் தானே அது? உங்க அப்பன் வீட்டுச் சொத்தோ, என் அப்பன் சொத்தோ இல்லையே? உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் பணம் செல்கிறதா எனச் சந்தேகமாக உள்ளது” என நிர்மலா சீதாராமன் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here