2ஆம் கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி..! தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..!

0
99

தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்கால தொடர்பைப் புதுப்பிக்கும் வகையில் நடத்தப்படும் இரண்டாம் கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

மத்திய அரசின் கல்வித்துறை, ‘காசி தமிழ்ச் சங்கமம்’ எனும் நிகழ்ச்சியைக் கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை நடத்தியது. தமிழ்நாட்டுக்கும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையே உள்ள பழங்கால தொடர்பைப் புதுப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதேபோல், இந்த ஆண்டும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ‘கே.டி.எஸ்.- 2.0’ (காசி தமிழ்ச் சங்கமம் 2ஆம் கட்டம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சங்கமம் இன்று (டிச.17) முதல் வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள், மதகுருமார்கள், எழுத்தாளர்கள் என 7 பிரிவுகளில் தலா 200 பேர் வீதம் மொத்தம் ஆயிரத்து 400 பேர் மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி மற்றும் காவிரி என்கிற பெயர்களில் 7 குழுக்களாக 8 நாள் பயணத்திட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு நடந்த முதற்கட்ட சங்கம நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதேபோல இந்த 2ஆம் கட்ட சங்கமத்தையும் பிரதமர் மோடி இன்று (டிச.17) மாலை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here