இந்திய நாட்டின் 75ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் நடக்கும் குடியரசு தின விழாவில், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் சிறப்பு விருந்திநராக பங்கேற்கிறார்.
இதன் வாயிலாக, சிறப்பு விருந்திநராக பங்கேற்கும், பிரான்சைச் சேர்ந்த ஆறாவது அதிபர் என்ற சிறப்பை அவர் பெறுகிறார். இந்த நிலையில், இரு நாட்கள் அரசு முறை பயணமாக, நம் நாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் இன்று இந்தியா வந்துள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு வந்த மேக்ரோனை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர், ஹவா மஹால் உள்ளிட்ட இடங்களை அவர் பார்வையிட இருக்கிறார்.
பின்னர் ஜெய்ப்பூரின் ஜந்தர் மந்தரில் பிரதமர் மோடியுடன் சாலை மார்கமாக பங்கேற்கும் அதிபர் மேக்ரோன், இரவு 7:30 மணியளவில் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்களில், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, இரவு 8:50 மணிக்கு டெல்லி புறப்படும் அவர், நாளை நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்.