Nirmala Sitharaman: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று, நாட்டின் பொருளாதாரம் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். இந்த நிலையில், அந்த அறிக்கையின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
அப்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும், வெள்ளை அறிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டன. இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நிர்மலா சீதாராமன் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, “என்னை, எதர்க்கட்சிகளால் அமைதிப்படுத்த முடியாது. உண்மையை பேசுவேன். எனது உரைக்கு பதிலளிக்க எதிர்க்கட்சிகள் தயாரா? கேள்விகளை எழுப்பும் காங்கிரசுக்கு, பதிலை கேட்பதற்கான பொறுமையோ, துணிவோ கிடையாது” என காட்டமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடும் சவால்களுக்கு மத்தியில், சரிவை நோக்கி சென்ற இந்திய பொருளாதாரத்தை பாஜக மீட்டுள்ளது. 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலக பேரிடரை எதிர்கொள்ள முடியாதவர்கள், எப்படி பேரிடரை எதிர்கொள்வது என எங்களுக்கு பாடம் எடுக்கின்றனர். ஐமுகூ அரசின் தவறுகளை சரி செய்யவே 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஐமுகூ ஆட்சியில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேட்டை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது. இந்த ஊழலால் மத்திய அரசுக்கு ரூ.1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. முந்தைய ஆட்சியின் போது, குட்கா தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கப்பட்டது.
நிலக்கரி சுரங்கம் அமைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், நிறுவனங்களால் மின்உற்பத்தி செய்ய முடியவில்லை. தேசம் இருளில் மூழ்கியது. ஆனால், நாங்கள் பின்பக்க கதவு வழியாக எங்கள் உறவினர்கள் நிலக்கரி சுரங்க உரிமம் பெறுவதை தடுத்தோம்.
பாஜக ஆட்சியில் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. நிலக்கரியை ஐமுகூ., அரசு சாம்பல் ஆக மாற்றியது. ஆனால், எங்களது கொள்கைகளால் நாங்கள் நிலக்கரியை வைரமாக மாற்றினோம்” என எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.