தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று இரண்டு தனித்தீர்மானங்களை முன்மொழிந்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையானது முற்றிலும் நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது. அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதியை முறியடிக்க வேண்டும்.
இந்த இரண்டுக்கும் எதிராக நாம் அனைவரும் ஒருசேர குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த தீர்மானங்களை நிறைவேற்றி தரும்படி உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி அமர்ந்ததும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தீர்மானத்தை ஆதரித்து பேசினார்.
அவர் பேசிக்கொண்டிருந்தபோது இந்த இரண்டு தீர்மானங்களையும் எதிர்த்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த சம்பவம் பேரவையில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.