‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி.. பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து போக்குவரத்தில் மாற்றம்..

0
181

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று (ஜன.19) தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் இந்த போட்டிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சென்னையில் நடைபெறும் இந்த விழாவில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று மாலை சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் பகுதிக்குச் சென்று சாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கிற்குச் செல்கிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறையினர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “பிரதமர் மோடி இன்று நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு’ தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். இதில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

பிரதமரின் வருகையையொட்டி விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொதுவாக அண்ணாசாலை, எஸ்வி பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும், எனவே வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here