அரசுப் பதவி யாருக்கு..? யுகபாரதி பதில் பயங்கரம்….!!!!

0
114

திமுக தொண்டர்களுக்குத் தினம்தோறும் திருவிழாதான். அதற்குக் காரணம் கலைஞர் நூற்றாண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவும் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவும் சேர்ந்து நடத்திய ‘கலைஞர் 100’ நிகழ்ச்சியில் பாடலாசிரியர் யுகபாரதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இலக்கிய வாழ்க்கையில் நடந்த பல அதிரடியான உண்மை சம்பவங்களை ரசிக்கும்படியாகப் பேசினார். ஒளவையார் பாடலையும் அரசாங்கத்தையும் அவர் இணைத்துச் சொன்ன தகவல்களை சமூக வலைத்தளத்தில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.


அப்படி என்ன பேசினார்? ஒளவையாரின் எந்தப் பாடலை ஒப்பிட்டார்? இந்த நிகழ்ச்சிக்கு வரும்போதே என்ன பேசலாம் என்று யோசித்துக் கொண்டே வந்தேன். அப்போது ஒரு விசயம் தோன்றியது. ஒரு அரசை யார் கையில் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று ஔவை ஒரு பாடல் எழுதி இருக்கிறார். அந்தப் பாடல் ஏன் ஞாபகம் வந்தது என்றால், இன்றைக்கு அந்தப் பாடலுக்குச் சரியான பொருத்தமான நாள். இன்று வி.பி.சிங்கின் நினைவுநாள். ‘சமூகநீதி’ காவலர் என்ற பட்டத்திற்கு அவரைவிட இந்தியாவில் பொருத்தமான வேறு ஒருவர் இருக்க முடியாது.சோழ மன்னனுடன் ஔவைக்கு ஒரு சிறு உரையாடல் நடக்கிறது. அப்போது ஔவையிடம், ‘நாட்டில் நிறையப் பொறுப்புகள் உள்ளன. ஆனால், அதை யார் கையில் கொடுப்பது என்பதில் எனக்கு ஐயங்கள் உள்ளன’ என்று கேட்கிறான் சோழன். பொதுவாக அரசர்களுக்குச் சந்தேகம் வரும்போது புலவர்களிடம் கேட்பது வழக்கம். நல்ல புலவர்களாக இருந்தால், நல்ல கருத்துகளை, யோசனைகளை அரசுக்குத் தருவார்கள். கவிஞனே அரசனாக ஆனது தான் கலைஞரின் கதை. அதைப் பின்னால் பேசுகிறேன். இப்போது ஔவையின் கதையைச் சொல்லிவிடுகிறேன். சோழ மன்னனை நோக்கி ஔவை, ‘உனக்கு என்ன பிரச்சினை சொல்’ என்று கேட்கிறாள். அதற்கு மன்னன், ‘நான்கு வர்ணம் சொல்கிறார்கள். அந்த நான்கு வர்ணங்களில் உள்ள யாரிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்தால் சரியாகச் செய்வார்கள்?’ என்று கேட்கிறான். அதற்கான விளக்கத்தைக் கூறி ஒரு பாடலை ஔவைப் பாடியதாகத் தனிப்பாடலில் ஒரு பாடல் உள்ளது. “நூல் எனிலோ கோல் சாயும், நுந்தமரேல் வெஞ்சமராம் கோல் எனிலோ அங்கே குடி சாயும்- நாலாவான் மந்திரியும் ஆவான் வழிக்குத் துணை ஆவான் அந்த அரசே அரசு!” என்று அந்தப் பாடல் முடிகிறது.


அதன் அர்த்தம் என்னவென்றால், முப்புரி நூல் அணிபவர்கள் கையில் கொடுத்தால் பூஜை புனஸ்காரம் என்று செய்தே இந்த அரசை நாசப்படுத்தி விடுவார்கள். அதன் பிறகு தளபதியாக உள்ள சத்திரியர்களிடம் கொடுத்தால் முழுக்க சண்டையிட்டே மொத்த அரசையும் தீர்த்துவிடுவார்கள். அதன் பிறகு கோல் பிடிக்கும் வியாபாரிகளிடம் கொடுத்தால், உள்ள பொருளுக்கு எல்லாம் விலையை ஏற்றி மக்களை நாசப்படுத்தி விடுவார்கள். அப்படி என்றால் யாரிடம் கொடுக்கலாம் என்றால், நான்காவதாக உள்ள சூத்திரனிடம் அரசுப் பொறுப்பைக் கொடுத்தால் அது சிறப்பாக இருக்கும். அந்த அரசே அரசு என்கிறாள் ஔவை. அந்த அரசிடம்தான் நாம் இப்போது பொறுப்பைக் கொடுத்துள்ளோம். ஆகவேதான் வி.பி.சிங்குக்கு சிலை எடுக்க முடிகிறது. கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாட முடிகிறது.


நான் ‘கணையாழி’யில் பணியிலிருந்தபோது கலைஞர் படத்தை அட்டைப் படமாகப் போடவேண்டும் என்று விரும்பினேன். நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்த்து எடுத்ததில் கணையாழிக்குத் தனி இடம் உண்டு. நவீன இலக்கியம் என்று சொல்லும்போதே பலருக்கும் புரிந்திருக்கும். அப்பத்திரிகை குழுவில் யார் இருந்திருப்பார்கள் என்று. என் விருப்பத்தைக் கேட்ட சிலர், ‘கலைஞர் அட்டைப்படம் போட்டு பத்திரிகை வெளியானால் உன்னை வேலையைவிட்டே நிறுத்திவிடுவார்கள். அல்லது பத்திரிகையையே நிறுத்திவிடுவார்கள்’ என்று பயமுறுத்தினார்கள். ஆனால் நான் பின் வாங்கவில்லை. பத்திரிகையின் குழுவில் மா.ராசேந்திரன் இருந்தார். அவர் ‘எப்படி இதழைத் தயாரிக்கத் திட்டம் வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான் சில யோசனைகளைச் சொன்னேன். அவர், ‘வெங்கட் சாமிநாதனிடம் ஒரு கட்டுரை கேளுங்கள்’ என்றார்.


வருக்குக் கலைஞரின் அரசியல் மீது சின்ன கசப்புணர்வு இருந்தது. ஆகவே, அவர் எழுதினால் எப்படி எழுதுவார் என்பதைப் பலரும் அறிந்திருக்கலாம். அந்தளவுக்கு அவர் பிரபலமானவர்தான். அவர் மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவரது வீட்டுக்குப் போனேன். அவரிடம் கலைஞரைப் பற்றி ஒரு கட்டுரையை நீங்கள் எழுதித் தரவேண்டும் என்று சொன்னேன். அவர், ‘எந்தக் கலைஞர்?’ என்று கேட்டார். அவருக்குத் தெரியும், நான் யாரைச் சொல்கிறேன் என்று. ஆனாலும் அவர் அப்படிக் கேட்டார். பிறகு ‘கருணாநிதியை உனக்குப் பிடிக்குமா?’ என்று கேட்டார். நான், ‘எனக்குப் பிடிக்குமா? பிடிக்காதா என்பது பிரச்சினைக் கிடையாது. உங்களுக்குப் பிடிக்குமா? பிடிக்காதா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் இந்தக் கட்டுரையைக் கேட்கிறோம்’ என்று பதில் சொன்னேன். பல ஆண்டுகள் முன்பாக கலைஞரை விமர்சித்து வெங்கட் சாமிநாதன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு மிகக் கடுமையான தொனியில் முரசொலி’யில் கலைஞரே பதில் கட்டுரையும் எழுதி இருக்கிறார். ஆகவே அவர் வேண்டாம் பிரச்சினை ஆகிவிடும் என்றார். எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று அவரை சம்மதிக்கவைத்தேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால், அவரது நூல்கள் தன்னிடம் இல்லை. படித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன என்றார். நான் அவருக்காக அனைத்து நூல்களையும் வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு வந்து நூல்களை வாங்கினால், ஒரு சாக்கு மூட்டை கொள்ளும் அளவுக்குக் கலைஞர் எழுதிய நூல்கள் இருந்தன. அதைக் கொண்டுபோய் அவர் வீட்டில் கொடுத்தேன். அதைப் பார்த்ததும் வெங்கட் சாமிநாதன், “இவ்வளவு நூல்களையா அவர் எழுதி இருக்கிறார்?” என்றார்.அவர் ஏறக்குறைய ஒரு மாதக் காலம் எடுத்துக்கொண்டார். முழுமையாக அனைத்து நூல்களையும் படித்துவிட்டு 25 பக்க அளவில் ஒரு அற்புதமான கட்டுரையை எழுதிக் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த பிறகு கலைஞரே வியந்து போனார் என்பது முக்கியமான செய்தி. ‘முரசொலி’யில் எந்த வெங்கட் சாமிநாதனைப் பற்றி விமர்சித்து எழுதினாரோ அதே இதழில் வெங்கட் சாமிநாதனைப் பாராட்டி ஒரு கட்டுரை எழுதினார் கலைஞர்” என்று பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் பாடலாசிரியர் யுகபாரதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here